கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம்.

 

ஒரே நேரத்தில் 400 அரசு பேருந்துகள்-100 ஆம்னி பேருந்துகளை இந்த பேருந்து முனையத்தால் கையாள முடியும். கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்தில் இருந்து தினந்தோறும் 1700 - 2400 பேருந்துகளை இயக்கக்கூடிய வசதி செய்யப்பட்டுள்ளது. இதன் பிரதான பேருந்து முனையத்தில் 400 அரசு பேருந்துகளை ஒரே நேரத்தில் நிறுத்த முடியும். 144 பேருந்துகளை பணிமனையில் நிறுத்த முடியும். புறநகர் பேருந்துக்களுக்கான பிரத்யேக முனையத்தில் 86 பேருந்துகளை நிறுத்தலாம். நாள்தோறும் ஒரு லட்சத்திற்கும் அதிகமான மக்கள் வந்து செல்வதற்கு ஏற்ற வகையில் வசதிகள் செய்யப்பட்டுள்ளன. பேருந்து முனையத்தின் பிரதான கட்டிடத்தின் அடித்தளத்தில் ஆயிரம் கார்கள், 2 ஆயிரம் இரு சக்கர வாகனங்களை நிறுத்தக்கூடிய வகையிலான பார்க்கிங் வசதி செய்யப்பட்டுள்ளது. தாய்மார்கள் பாலூட்டும் அறை, திருநங்கைகள் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு தனி கழிவறைகள் அமைக்கப்பட்டுள்ளன. பேருந்து நிலையத்திற்குள்ளேயே அவசர சிகிச்சை மையம், மருந்தகம் மற்றும் 24 மணி நேர ஆம்புலன்ஸ் வசதி செய்யப்பட்டுள்ளது. பயணிகளுக்கு என அங்காங்கே குடிநீர் வசதி, செல்போன் சார்ஜிங் நிலையங்கள், உணவகங்கள், கடைகள் ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன. மாநகர பேருந்துகள் வந்து செல்வதற்கான தனி நடைமேடைகள் அமைக்கப்பட்டுள்ளது. மாநகரப் பேருந்து நிலையத்தில் இருந்து வெளியூர் பேருந்து நிலையத்திற்கு செலல் எஸ்கலேட்டர் வசதியும், அதிக பாரத்தை கொண்டு செல்ல லிப்ட் வசதியும் செய்யப்பட்டுள்ளது. பேருந்து நிலையத்திற்குள் 6 மின் தூக்கிகளும், ஒரு எஸ்கலேட்டரும் செயல்பாட்டில் உள்ளது. பயணிகள், ஓய்வறை, ஓட்டுநர், நடத்துநர் ஓய்வறை, பேருந்து பணிமனை அமைக்கப்பட்டுள்ளது. பேருந்து நிலைய கட்டத்திற்குள் தமிழ்நாட்டின் பண்பாட்டை எதிரொலிக்கும் வகையிலான வண்ண ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன. பயணிகளின் பாதுகாப்பு வசதிக்காக 150 கண்காணிப்பு கேமராக்கள் பேருந்து நிலையம் முழுவதும் பொருத்தப்பட்டுள்ளன. அத்துடன் வெளியே புறநகர் காவல்நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. கிளாம்பாக்கம் டு சென்னை இணைப்பு பேருந்து: கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கு 70V, 70C, 104 CCT ஆகிய பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. காலை 4 மணி முதல் 10 மணி வரை கிளாம்பாக்கத்தில் இருந்து கோயம்பேட்டிற்கு 15 நிமிடத்திற்கு ஒரு பேருந்தும், மாலை 4 மணி முதல் இரவு 10 மணி வரை கோயம்பேட்டிற்கு செல்ல 5 நிமிடத்திற்கு ஒரு பேருந்தும் இயக்கப்படவுள்ளது. அதேபோல் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை தாம்பரத்திற்கு 55V, M18 ஆகிய பேருந்துகள் 5 நிமிடத்திற்கு ஒரு முறையும், இரவு 10 மணி முதல் காலை 4 மணி வரை தாம்பரத்திற்கு 8 நிமிடத்திற்கு ஒரு பேருந்துகளும் இயக்கப்படவுள்ளன. கிளாம்பாக்கத்தில் இருந்து கிண்டிக்கு 18ACT என்ற பேருந்து காலை 4 மணி முதல் 10 மணி வரை 3 நிமிடத்திற்கு ஒருமுறையும், காலை 10 மணி முதல் 4 மணி வரை 10 நிமிடத்திற்கு ஒரு முறையும், மாலை 4 முதல் இரவு 10 மணி வரை 3 நிமிடத்திற்கு ஒரு முறையும், இரவு 10 மணி முதல் காலை 4 மணி வரை கிண்டிக்கு 15 நிமிடத்திற்கு ஒரு முறையும் பேருந்துகள் இயக்கப்படும். எந்தெந்த ஊர்களுக்கு பேருந்துகளை இயக்க திட்டம்: கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து நாளை முதல் தென் மாவட்டங்களுக்கு பேருந்துகள் இயக்கப்படும் என்றும், நாளை முதல் கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கு தென் மாவட்ட பேருந்துகள் செல்லாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து வரும் பேருந்துகள் கிளம்பாக்கம் பேருந்து நிலையத்திற்கு வந்து ஊரப்பாக்கம், அய்யன்சேரி கூட்டுச்சாலை வழியாக தேசிய நெடுஞ்சாலையை அடைய ஏதுவாக சாலை அமைக்கப்பட்டுள்ளது. கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து மதுரை, கோவை, ஈரோடு, சேலம், வேதாரண்யம், நாமக்கல், நாகை, வேளாங்கண்ணி, மயிலாடுதுறை, திருவாரூர், திருத்துறைப்பூண்டி, ஊட்டி, பொள்ளாச்சி, திருப்பூர், மேட்டுப்பாளையம் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு இயக்கப்படவுள்ளது. வந்தவாசி, போளூர், திண்டிவனம், திருவண்ணாமலை உள்ளிட்ட வட மாவட்டங்களுக்கு இங்கு இருந்து பேருந்துகள் இயக்கப்படவுள்ளன. எர்ணாகுளம், குருவாயூர் உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கும் பேருந்துகள் இயக்கப்படவுள்ளது. ஜனவரி 1-ம்தேதி முதல் தென்மாவட்டங்களுக்குச் செல்லக்கூடிய அரசு பேருந்துகள் இயக்கப்படவுள்ளன. விரைவில் ரயில் நிலையமும், மெட்ரோ நிலையமும் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்கு அருகில் அமைக்கப்பட்டவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.



Comments