தாய்ப்பாலை பெருக்கும் முருங்கை பூ

 

தாய்ப்பாலை பெருக்கும் முருங்கை பூ."


நமது வீடுகளில் வளர்க்கும் முருங்கை அற்புதமான மருத்துவ குணங்களை கொண்டதாக விளங்குகிறது. முருங்கை காய் மற்றும் முருங்கை கீரை ஆகியவை உடலுக்கு உரம் அளித்து நீண்ட ஆயுளை தருகிறது.  முருங்கைப்பூ மாத விலக்கை தூண்டக் கூடியது. ஆண்களைப் பொறுத்த அளவில் உயிரணுக்களை அதிகரிக்க செய்யக் கூடியது. ஆண் மலட்டுத் தன்மையை நீக்கக் கூடியது. உடலுக்கு மிகுந்த உரத்தை அளித்து உள் உறுப்புகளை தூண்டக் கூடியதாக செயல்படுகிறது. முருங்கைப்பூவை பயன்படுத்தி கண்களுக்கு குளிர்ச்சியை ஏற்படுத்தக் கூடிய மருந்து ஒன்றை தயார் செய்யலாம். இந்த முருங்கைப்பூ குழந்தை பெற்ற தாய்மார்களுக்கு அதிகமாக தாய்ப்பால் சுரப்பதற்கும் பயனுட்டக் கூடியதாக அமைந்துள்ளது. 

இதற்கு தேவையான பொருட்கள் முருங்கைப்பூ,  பூண்டு, பால், பனங்கற்கண்டு. முருங்கைப்பூவை ஒரு கைப்பிடி அளவு எடுத்துக் கொள்ள வேண்டும். இதனுடன் 4 அல்லது 5 பூண்டு பற்களை சேர்த்துக் கொள்ள வேண்டும். சிறிதளவு பனங்கற்கண்டு சேர்க்கவும். சிறிதளவு நீர் சேர்த்து முருங்கைப்பூவை வேக வைக்க வேண்டும்.  பூ வெந்ததும் இதனுடன் காய்ச்சிய பாலை சேர்க்க வேண்டும். பின்னர் ஒரு கொதி வந்த பிறகு அடுப்பை நிறுத்த வேண்டும். உடலில் உஷ்ணம் அதிகரித்து கண் எரிச்சல் ஏற்படும் காலங்களில் இதை தொடர்ந்து பருகிவருவதன் மூலம் உடல் சூட்டை தணிக்கிறது.  இளம் தாய்மார்கள் தொடர்ந்து இந்த பாலை பருகி வருவதன் மூலம் பால் பெருக்கியாக இது செயல்படுகிறது.

முருங்கையின் காய், கீரை, பூ ஆகிய அனைத்தும் உணவாக பயன்படுகிறது. முருங்கை பிஞ்சு அருமையான மருத்துவ குணத்தை பெற்றிருக்கிறது. முருங்கை பிஞ்சை தோலோடு சேர்த்து நாம் சமைத்து சாப்பிடும் போது எலும்பை பற்றிய பல நோய்கள் நீங்குகின்றன. அத்தி ஜூரம் என்கிற எலும்பை பற்றிக் கொள்ளும் காய்ச்சலுக்கு இது மருந்தாகிறது.  மூட்டு வலியை ஏற்படுத்தும் காய்ச்சல், எலும்புகள் பலவீனமடைவதால் ஏற்படும் உடல் வலி இது போன்ற எலும்பு தொடர்பான நோய்களுக்கு முருங்கை பிஞ்சு ஒரு சிறந்த நிவாரணியாக அமைந்து உடலுக்கு பலம் சேர்க்கிறது.

அடுத்ததாக, மூட்டுவலி மற்றும் காய்ச்சலை போக்கக் கூடிய மருந்தை முருங்கையை பயன்படுத்தி தயார் செய்யலாம். இதற்கு தேவையான பொருட்கள் முருங்கை பிஞ்சு, மிளகு பொடி, வெங்காயம், பூண்டு, சமையல் உப்பு, நல்லெண்ணை. வாணலியில் சிறிதளவு நல்லெண்ணை எடுத்துக் கொள்ளவும். பூண்டு பற்களை தட்டி எண்ணெயில் இடவும். இதனுடன் வெங்காயத்தை சேர்த்து வதக்கவும். முருங்கை பிஞ்சை சிறிது சிறிதாக நறுக்கி இதனுடன் சேர்க்கவும்.  இதையும் சேர்த்து வதக்கவும். தேவையான அளவு உப்பு சேர்க்கவும். 

சிறிது மிளகு பொடி சேர்க்கவும். பின்னர் தேவையான அளவு நீர் சேர்த்து முருங்கை பிஞ்சுகளை நன்றாக வேக வைக்கவும்.  பின்னர் இந்த தேநீரை முருங்கை பிஞ்சுகளை சேர்த்துக் எடுத்துக் கொள்வதன் மூலம் மூட்டு வலி, எலும்பு தொடர்பான காய்ச்சல் போன்றவற்றில் இருந்தும் நிவாரணம் பெறலாம்.  இவ்வாறு நாம் அன்றாடம் பயன்படுத்தும் முருங்கையின் பல்வேறு வகையானவற்றையும் உணவில் சேர்த்து உடலை ஆரோக்கியத்துடன் வைத்திருப்போம்.


Comments