பார்வையின்றி ஐஏஎஸ் தேர்வில் சாதித்த இளையர்கள்;
பார்வையின்றி ஐஏஎஸ் தேர்வில் சாதித்த இளையர்கள்; தமிழகத்திலிருந்து 60 பேர் தேர்வு
மதுரையைச் சேர்ந்த 25 வயதான இந்த இளம்பெண் எத்தகைய இக்கட்டான சூழ்நிலையிலும் தம்மால் நூறு விழுக்காடு வெற்றிபெற முடியும் என்கிறார்.
பள்ளியில் முதலாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தபோது திடீரென பார்வை குறைபாடு ஏற்பட்டு அடுத்த சில மாதங்களிலேயே பார்வை இழந்துள்ளார் பூர்ண சுந்தரி. எனினும் இவரது பெற்றோர் ஒலி வழி பாடங்களைப் படிக்க வைத்து, பக்கபலமாக இருந்துள்ளனர்.
தேர்வுகள் நடக்கும்போது பூர்ண சுந்தரி விடைகளைச் சொல்ல, ஆசிரியர்கள் அதை எழுதுவது வழக்கம். இப்படி பள்ளிப்படிப்பு, பட்டப்படிப்பை முடித்த பிறகுதான் இந்திய ஆட்சிப் பணியில் சேரவேண்டும் என இலக்கு நிர்ணயித்துள்ளார் பூர்ண சுந்தரி.
2015ஆம் ஆண்டு பிஏ ஆங்கில இலக்கியத்தில் பட்டம் பெற்ற பிறகு சென்னையில் உள்ள மனிதநேய அறக்கட்டளையின் ஐஏஎஸ் பயிற்சி வகுப்பில் சேர்ந்து படிக்கத் துவங்கினார்.
மூன்று முறை தேர்வில் தோல்வி கண்டாலும், விடா முயற்சியுடன் செயல்பட்டு நான்காவது முறையும் எழுதி, தற்போது தேசிய அளவில் 286ஆவது இடத்தைப் பிடித்துள்ளார் பூர்ண சுந்தரி. இம்முறை ஐஏஎஸ் தேர்வில் நாடு முழுவதும் 829 பேர் தேர்வு பெற்றுள்ளனர்.
இவரது தந்தை முருகேசன் விற்பனை பிரதிநிதியாகப் பணியாற்ற, தாயார் ஆவுடைதேவி இல்லத்தரசியாக உள்ளார்.
சாதாரண குடும்பத்தில் பிறந்து, வறுமையின் வலியை உணர்ந்து படித்து வளர்ந்ததாகக் குறிப்பிடும் பூர்ண சுந்தரி, ஏழை, எளிய மக்கள் முன்னேற உறுதுணையாக இருப்பதே தமது விருப்பம் என்கிறார்.
சிறு வயதிலிருந்தே ஒரு மாற்றுத்திறனாளியாக கல்வி கற்பதில் எதிர்கொள்ள வேண்டியிருந்த சவால்கள்தான் தன்னை சாதிக்கத் தூண்டியதாகக் குறிப்பிடுபவர், கடந்த 2016ம் ஆண்டு முதல் இதுவரை இருபதுக்கும் மேற்பட்ட போட்டித் தேர்வுகளை மனம் தளராமல் எழுதியதாகக் கூறுகிறார்.
“கடந்த 2018ஆம் ஆண்டு வங்கித் தேர்வில் வெற்றி பெற்று அரசு ஊரக வளர்ச்சி வங்கியில் எழுத்தராகப் பணிபுரிந்து வரும் நிலையில் இந்திய குடிமைப் பணித் தேர்வில் வெற்றி பெற்றுள்ளேன்.
சிறு வயது முதல் எனது தாயாரும் எனக்கு ஒருவகையில் ஆசிரியராக இருந்தார். பார்வையற்ற மாற்றுத்திறனாளி என்ற எண்ணமே எனக்கு வராத அளவிற்கு எனது பெற்றோர் பார்த்துக்கொண்டனர்.
“மாற்றுத்திறனாளிகள் முயற்சியைக் கைவிடாமல் தொடர்ந்து போராடினால் நிச்சயம் வெற்றி கிடைக்கும்,” என்கிறார் பூர்ண சுந்தரி.
இவரைப் போன்றே சென்னையைச் சேர்ந்த பார்வையற்ற மாணவரான பாலநாகேந்திரனும் ஐஏஎஸ் தேர்வில் 659வது இடத்தைப் பிடித்து தேர்ச்சி பெற்றுள்ளார்.
இதற்கிடையே பிரபல நடிகர் சின்னி ஜெயந்தின் மகன், ஸ்ருதன் ஜெய் நாராயணனும் இத்தேர்வில் வெற்றி பெற்று தேசிய அளவில் 75ஆவது இடம் பெற்றுள்ளார்.
தமக்கு பெற்றோர் முழு சுதந்திரம் அளித்ததாகவும் கல்வி, சுற்றுச்சூழல், தொழில்வளம் ஆகியவற்றில் கவனம் செலுத்த உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இவ்வாண்டு தமிழகத்திலிருந்து 60 பேர் இந்திய குடிமைப் பணித் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர். அவர்களில் எழுவர் முதல் 100 இடங்களுக்குள் வந்திருப்பதாகக் கூறப்படுகிறது.
Comments
Post a Comment