நான்கு மாதங்களாக முடங்கியிருக்கும் வெளிநாட்டு ஊழியர்கள்.
கொவிட்-19 நெருக்கடிநிலையால் தங்கும் விடுதிகளில் கிட்டத்தட்ட நான்கு மாதங்களாக முடங்கியிருக்கும் வெளிநாட்டு ஊழியர்களுக்குக் கூடுதல் சுதந்திரம் வழங்க ஏற்பாடுகள் செய்யப்படுவதாக மனிதவள மூத்த துணை அமைச்சர் ஸாக்கி முகம்மது தெரிவித்துள்ளார்.
தங்கும் விடுதிகளில் இருக்கும் வெளிநாட்டு ஊழியர்கள் பலர் கொரோனா கிருமித்தொற்றால் பாதிப்படைந்ததை அடுத்து, நிலைமை சரியாகும் வரை அவர்கள் அங்கிருந்து வெளியே செல்ல அனுமதியில்லை. இதனால் அவர்கள் மாத கணக்கில் தங்கும் விடுதிகளிலேயே முடங்கியிருக்கின்றனர். ஒருசிலர் மட்டுமே வேலைக்குத் திரும்பியுள்ளனர். ஆனால் அவர்களும் ஒய்வுநாட்கள் உட்பட பெரும்பாலான நேரங்களில் தங்கும் விடுதிகளிலேயே இருக்க வேண்டும்.
பல நாட்களாக தனிமைப்படுத்தப்பட்டிருப்பதாலும் தங்கள் உடல்நலம், வேலை தொடர்பான நிச்சயமற்றநிலை நிலவுவதாலும் குடும்பத்தைப் பார்க்க முடியாததாலும் வெளிநாட்டு ஊழியர்களிடையே மனரீதியான, உணர்வு ரீதியான பாதிப்பு அதிகரித்து வருவதாக அரசு சார்பற்ற அமைப்புகள் கூறுகின்றன.
தங்கும் விடுதிகளில் இருக்கும் வெளிநாட்டு ஊழியர்கள் சன்னல் அல்லது கட்டடத்தின் விளிம்பில் நிற்பதைக் காட்டும் காணொளிகள் வெளிவந்துள்ளதை அடுத்து அவர்களின் மனநலம் குறித்து கவலை எழுந்துள்ளது.
தங்கும் விடுதிகளில் நிகழ்ந்துள்ள சில இயற்கைக்கு மாறான மரணங்களும் வெளிநாட்டு ஊழியர்களின் மனநலத்தைக் காக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டிய அவசியத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதுதொடர்பாக, மனிதவள அமைச்சும் சுகாதார அமைச்சும் ஒன்றிணைந்து மனநலக் கழகத்துடனும் அரசு சார்பற்ற அமைப்பு களுடனும் அணுக்கமாகச் செயல்பட்டு வருவதாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளிதழிடம் திரு ஸாக்கி இன்று (ஆகஸ்ட் 5) தெரிவித்தார்.
வெளிநாட்டு ஊழியர்களுக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் சற்று தளர்த்தப்படும் என்று அவர் கூறினார்.
வெளிநாட்டு ஊழியர்கள் பாதுகாப்பான முறையில் வெளியே சென்று வர திட்டம் வகுக்கப்படும் என்று திரு ஸாக்கி தெரிவித்தார்.
அதுமட்டுமல்லாது, அவர்களுக்கு வெவ்வேறு நாட்களில் ஓய்வு நாட்கள் கொடுப்பது குறித்து ஆராய்ந்து வருவதாகவும் அவர் கூறினார். தங்கும் விடுதிகளில்இருந்து வெளியே சென்று பொழுது போக்கு நடவடிக்கைகளில் அவர்கள் ஈடுபட இந்த ஏற்பாடு வகைசெய்யும் என்றார் திரு ஸாக்கி.
“வெளிநாட்டு ஊழியர்களுக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் சற்று தளர்த்தப்படும். அவர்களுக்கு வழங்கப்படும் ஆதரவில் இதுவும் ஒன்று.
“கட்டுப்பாடுகள் சற்று தளர்த்தப்பட்டதும் அவர்கள் பொழுதுபோக்கு நிலையங்களுக்குச் சென்று அங்கு நேரத்தைச் செலவழிக்கலாம். வெளிநாட்டு ஊழியர்கள் மீண்டும் சமூகத்தில் இணைவதற்கான நேரம் இன்னும் கனியவில்லை.
“ஆனால் அவர்கள் ஒரே இடத்தில் முடங்கியிருக்கக்கூடாது. அது அவர்களுக்கு மனவுளைச்சலை ஏற்படுத்தும். அவர்களது உடல்நலத்துக்கு மட்டுமின்றி மனநலத்துக்கும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்,” என்று திரு ஸாக்கி தெரிவித்தார்.
இதற்கிடையே, கடந்த ஜூன் மாதத்துடன் ஒப்பிடுகையில் மனவுளைச்சலால் பாதிக்கப்பட்டுள்ள வெளிநாட்டு ஊழியர்களின் எண்ணிக்கை கடந்த மாதம் சற்று குறைந்துள்ளபோதிலும் பாதிப்பின் தீவிரம் அதிகரித்திருப்பதாக வெளிநாட்டு ஊழியர்களுக்கான மனநலச் சேவைகளை வழங்கும் பிரதான அறநிறுனமான ஹல்த்சர்வ் அமைப்பின் தொடர்புப் பிரிவுத் தலைவர் சுவன் லோ தெரிவித்தார்.
தன்னைத் தானே துன்புறுத்திக்கொள்பவர்கள், உயிரை மாய்த்துக்கொள்ளும் எண்ணம் கொண்டவர்கள் ஆகியோரின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதாக திருவாட்டி லோ கூறினார்.
கடந்த ஒன்று அல்லது இரண்டு வாரங்களில் உயிரை மாய்த்துக்கொள்ளும் எண்ணம் கொண்ட வெளிநாட்டு ஊழியர்களின் எண்ணிக்கை மும்மடங்கு அதிகரித்திருப்பதாக அவர் தெரிவித்தார்.
அவர்களில் 10 விழுக்காட்டினர் அதுகுறித்து தீவிரமாக யோசித்து வருவதாக அவர் வருத்தம் தெரிவித்தார்.
Hope
ReplyDelete