கருவளையத்தை மறைக்க மேக்கப் வேண்டாம்...

கருவளையத்தை மறைக்க மேக்கப் வேண்டாம்... இரும்புச்சத்து உணவு போதும்!




``கணிப்பொறியில் தொடர்ந்து வேலை பார்ப்பது, நள்ளிரவு வரை தொடரும் ஸ்மார்ட்போன் சாட்டிங், ஸ்ட்ரெஸ், உடம்பில் இரும்புச்சத்து குறைவு, தூக்கமின்மை மற்றும் மரபுவழிப் பிரச்னை எனப் பல காரணங்களால் கருவளையம் உருவாகிறது. இதை மறைக்க மேக்கப் வேண்டாம், கருவளையம் வந்திருப்பது எதனால் எனத் தெரிந்துகொண்டுவிட்டால் சரிசெய்வது சுலபம்'' என்கிறார் பியூட்டீஷியன் மோனிஷா பிரசாந்த்.
* காரணம் கம்ப்யூட்டரா? 
கம்ப்யூட்டர் ஸ்கிரீனை விட்டு கண்களை அகற்றாமல் வேலை பார்ப்பவர்களுக்குக் கருவளையம் வருவதற்கு நிறைய வாய்ப்புள்ளது. எனவே, அரை மணி நேரத்துக்கு ஒருமுறை கணிப்பொறி திரையைத் தவிர்த்து, இரண்டு கைகளையும் குவித்து கண்களைப் பொத்திக்கொள்ள வேண்டும். சில நொடிகள் கிடைக்கும் அந்த இருட்டு கண்களுக்குச் சிறிய ஓய்வையும் புத்துணர்ச்சியையும் கொடுக்கும். ஜன்னலுக்கு வெளியே பார்வையைச் செலுத்தி, மரங்கள் மற்றும் வேறு பொருள்களைப் பார்க்கவும். இதற்கு வாய்ப்பு இல்லையெனில், அலுவலகத்துக்குள்ளேயே ஒரு சின்ன வாக் சென்று வாருங்கள். 
மோனிஷா* நள்ளிரவிலும் ஸ்மார்ட்போனா?
இருட்டு அறையில் ஸ்மார்ட்போனில் படமோ அல்லது வேறு எதையோ பார்த்துக்கொண்டிருந்தால், கண்கள் பாதிக்கப்படும். கருவளையமும் கட்டாயம் வரும். இரவு நேரத்தில், ஸ்மார்ட்போன் பார்க்கும் நேரத்தைக் குறையுங்கள். பார்க்காமல் தவிர்ப்பது இன்னும் பெஸ்ட். தினமும் அரை மணி நேரம், கண்களின் மீது தண்ணீரில் நனைத்த பஞ்சை வைக்கவும்.
* ஸ்ட்ரெஸ்ஸாக ஃபீல் செய்கிறீர்களா?
உங்களுக்கும் இந்தக் கருவளையப் பிரச்னை வரலாம். மனதுக்குப் பிடித்த இசையைக் கேளுங்கள், நண்பர்களுடன் நல்ல விஷயங்களை உரையாடுங்கள். சரியான நேரத்தில் உறங்கச் செல்லுங்கள்.
* இரும்புச்சத்து குறைவா?
கண்களில் மை வைக்கும் பகுதி நல்ல சிவப்பு நிறத்தில் இருக்கிறதா அல்லது வெளுத்துப் போய் இருக்கிறதா என்று செக் செய்யுங்கள். சிவப்பு நிறம் என்றால், உங்கள் கருவளையத்துக்கு வேறு ஏதோ காரணம். வெளுத்து இருந்தால், இரும்புச்சத்துக் குறைபாடு. முருங்கைக்கீரை, எள், பேரீச்சை போன்ற இரும்புச்சத்து நிறைந்த உணவுகளை நிறையச் சாப்பிடுங்கள். தேவைப்பட்டால் மருத்துவரிடம் ஆலோசித்து காட்லிவர் ஆயில் மாத்திரைச் சாப்பிடலாம்.
* எவ்வளவு நேரம் தூங்குகிறீர்கள்? 
நிறையப் பெண்களுக்குத் தூக்கம் குறைவதுதான் கருவளையப் பிரச்னைக்கு முக்கிய காரணம். 7 மணி நேரம் தூக்கம் அவசியம். கண்களின் மேலே புதிதாக நறுக்கிய வெள்ளரித்துண்டுகள் அல்லது உருளைக்கிழங்குத் துண்டுகளை வையுங்கள். இவை கண்களைக் குளிர்ச்சிப்படுத்தி, கருவளையத்தை குறைக்கும். க்ரீன் டீ பேகை நனைத்து, ஃபிரிட்ஜில் வைத்து குளிரச்செய்து கண்களின் மீது வைத்தாலும் கருவளையம் மறையும். பாதாம் எண்ணெயைக் கண்களின் கீழே தடவி வந்தாலும் இந்தப் பிரச்னை சரியாகும்.
அழகு
* ஹார்மோன் பிரச்னையா?
`நான் நன்றாகத் தூங்குகிறேன்; சத்தாகத்தான் சாப்பிடுகிறேன், இரவில் ஸ்மார்ட்போன் தொடுவதில்லை. ஆனாலும் கருவளையம் வந்துவிட்டதே' என்பவர்கள், டாக்டரிடம் செல்லுங்கள். ஏனென்றால், ஹார்மோன் பிரச்னைகள் இருந்தாலும் கருவளையமாக வெளிப்படும்.
* மரபு வழியா?
 அம்மா, சித்தி, அத்தை என்று நெருங்கிய சொந்தங்களுக்குக் கருவளையம் இருந்தால், உங்களுக்கும் வருவதற்கு வாய்ப்புள்ளது. ஆனாலும், பயப்படத் தேவையில்லை. மரபு வழி கருவளைத்தையும் `அண்டர் ஐ' சிகிச்சை மூலம் குறைக்கலாம்.

Comments