உடல் உபாதைகள்

தினமும் நாம் ஒவ்வொருவரும் நிறைய உடல் உபாதைகளை சந்தித்து கொண்டு தான் இருக்கிறோம். சுறுசுறுப்பான வாழ்க்கை முறை மற்றும் ஓடியாடி திரியும் வீட்டு வேலைகள் இவற்றின் இடையில் உங்கள் உடல் உபாதைகளை அலட்சியமாக விட்டு விடுகிறீர்கள். நீங்கள் ஆரோக்கியமாக இருக்கிறீர்களா அல்லது ஏதாவது நோய் உங்களை தாக்கி உள்ளதா என்பதை உங்களுக்கு ஏற்படும் அறிகுறிகள் மூலமும் டாக்டர்களின் ஆலோசனை மூலமுமே அறிய முடியும். எனவே உங்களுக்கு ஏற்படும் சாதாரண உடல் உபாதைகளில் கூட அதை எப்படி போக்குவது என கவனம் செலுத்துங்கள். நீங்கள் தினமும் சாதாரணமாக விட்டு விடும் 5 சிறிய உடல் உபாதைகளை பற்றியும் அதை எப்படி தீர்ப்பது என்பது பற்றியும் இக்கட்டுரையில் காணலாம்.
முதுகு வலி
எல்லாருக்கும் இந்த முதுகு வலி பிரச்சினை என்பது தினமும் எட்டிப் பார்க்கும் விஷயமாக உள்ளது. இது சிறிய வலியாகவோ அல்லது தீவிர வலியாகவோ இருக்கலாம். மேலும் குறுகிய காலமோ அல்லது நீண்ட காலமோ தொடரலாம். எது எப்படி இருப்பினும் இந்த முதுகு வலியால் உங்கள் தினசரி வேலைகளை கூட சரி வர செய்ய முடியாமல் போகும். முதுகு வலி வர முக்கிய காரணம் கனமான பொருளை குனிந்து தூக்குவதால் முதுகுப்புற தசைகளில் வேதனை உண்டாகிறது. மேலும் வயதாகுவதும் ஒரு முக்கிய காரணமாக அமைகிறது. இதிலிருந்து விடுபட ஓரே வழி உடற்பயிற்சி செய்வது. உடற்பயிற்சியின் மூலம் இந்த வலி யிருந்து நிவாரணம் பெறலாம். சரியாக நிற்றல், அமருதல் மற்றும் நம் தோரணையை சரியாக அமைப்பதன் மூலம் எதிர்காலத்தில் இந்த பிரச்சினை வராமல் தடுக்கலாம். மேலும் யோகா அல்லது பிலேட்ஸ் போன்ற தனி உடற்பயிற்சிகளையும் நீங்கள் மேற்கொள்ளலாம். அப்படியும் உங்கள் முதுகு வலி பிரச்சினை சில வாரங்களில் சரியாகவில்லை என்றாலோ அல்லது உங்கள் வயதின் காரணமாகவோ நீங்கள் மருத்துவரை நாடிவது நல்லது. 
தலைவலி 
நீங்கள் தினமும் காலையில் எழுந்திருக்கும் போதே தலைவலியும் தொற்றிக் கொண்டால் என்ன செய்வீர்கள். உங்களுக்கு வீட்டில் மற்றும் அலுவலகத்தில் ஏற்படும் மன அழுத்தம் இந்த தலைவலிக்கு முக்கிய காரணமாக அமைகிறது. இது மட்டுமா போக்குவரத்து நெரிசல் சத்தம், குடும்ப மற்றும் நண்பர்கள் பிரச்சினை, ஆரோக்கியமற்ற உணவு முறையால் உண்டாகும் அசிடிட்டி போன்றவைகளும் உங்கள் தலையில் பாரத்தை ஏத்தி விடுகின்றன. தலைவலியை பற்றி கவலைப்பட தேவையில்லை என்றாலும் உங்கள் மன அழுத்தம் குறைய மருத்துவரை சந்தித்து நலம் பெறுவது நல்லது.
பல் கூச்சம் 
உங்கள் நாளின் தொடக்கத்தை ஒரு கப் காபி அல்லது டீயின் சிப்பில் தான் ஆரம்பப்பீர்கள் அல்லவா. கொஞ்சம் யோசித்து பாருங்கள் உங்களுக்கு பல் கூச்சம் இருந்தால் என்ன செய்வீர்கள். கண்டிப்பாக தேநீர் கப்புடன் உங்கள் விடியல் விடியாது. பற்களின் எனாமல் நாம் உணவுகளை சவைக்கும் போதோ அல்லது கடித்து உண்ணும் போதோ பற்களுக்கு எந்த விதமான பாதிப்பும் ஏற்படாமல் இருக்க உதவுகிறது. நாம் உண்ணும் குளிர்ந்த மற்றும் சூடான உணவுகள் பற்களின் நரம்புகளுக்கு செல்லாமல் எனாமல் தடுக்கிறது. இந்த எனாமல் பாதிப்படையும் போது சூடான அல்லது குளிர்ந்த உணவுகள் பற்களின் நரம்புகளில் பட்டதும் சுரீரென்று ஒரு வலி உண்டாகிறது. நிறைய பேர்கள் இந்த பல் கூச்சத்தை பெரிதாக எடுப்பதில்லை. இது சில விநாடிகளில் அல்லது இடையிடையே வந்து விட்டு போய்விடும் என்று அலட்சியமாக விட்டு விடுகிறார்கள். இதன் விளைவு நாளடைவில் இதன் பாதிப்பு தீவிரமாகி விடும். இதற்கு உள்ள ஒரே தீர்வு சாதாரண டூத் பேஸ்ட்டை பயன்படுத்தாமல் கூச்சத்தை போக்கும் சிறப்பான டூத் பேஸ்ட்டை பயன்படுத்துங்கள். இது நம் எனாமலை பல் கூச்சத்தில் இருந்து காக்கும். இதை தினமும் இரண்டு முறை கொண்டு பல் துலக்குங்கள். இதன் அடிப்படை பிரச்சினையிலிருந்து இந்த பல் கூச்சத்தை பார்த்து நிவாரணம் பெற வேண்டும். அப்படியும் சில வாரங்களில் பலன் கிடைக்காவிட்டால் நீங்கள் பல் மருத்துவரை நாடிச் செல்வது நல்லது. அவர்கள் உங்கள் பல் கூச்சத்திற்கான அறிகுறிகளை கொண்டு சிகிச்சை அளிப்பார்.
முடி உதிர்வு 
எல்லாருக்கும் தினமும் கொஞ்சம் முடியாவது கொட்டத் தான் செய்யும். ஒரு நாளைக்கு 50-100 முடிகள் வரை கொட்டினால் அது ஒரு சாதாரண விஷயம். ஆனால் நீங்கள் தினமும் தலை வாரும் போது உங்கள் சீப்பிலும் தலையணையிலும் அதிகமான முடி உதிர்ந்தால் அதை கண்டிப்பாக நீங்கள் கவனிக்க வேண்டும். எனவே உங்கள் கூந்தலை சுத்தமாக, சாம்பு கொண்டு அழுக்குகளை நீக்கி, கூந்தலுக்கு போதுமான போஷாக்குடன் பராமரிக்க வேண்டும். மன அழுத்தம் போன்றவற்றால் உங்களுக்கு முடி உதிர்தல் ஏற்பட்டால் மன அழுத்தத்தை குறைக்க முயல வேண்டும். அப்படியும் எந்த மாற்றமும் தெரிய வில்லையென்றால் சரும மருத்துவரை நாடுவது நன்மை அளிக்கும். அவர் உங்கள் கூந்தல் உதிர்தலுக்கான பிரச்சினையை கண்டறிந்து அதற்பூ தகுந்தாற் போல் சிகிச்சை அளிப்பார். 
நெஞ்செரிச்சல் 
நெஞ்செரிச்சல் என்பது நமது வயிற்றில் உண்டாகும் அசெளகரியமான நிலையாகும். வயிற்றில் இருக்கும் அமிலம் நம் உணவுக் குழாய் வழியாக மேலே எதுக்களிப்பதால் நெஞ்சு, தொண்டை மற்றும் வயிற்று பகுதியில் ஒரு எரிச்சல் ஏற்படுகிறது. இந்த நெஞ்செரிச்சல் நாம் உணவு சாப்பிட்ட பிறகில் இருந்து சில மணி நேரம் வரை இருக்கும். அதிக உணவு உண்ணுதல், அதிக கொழுப்பு மற்றும் எண்ணெய் உணவுகள், ஆல்கஹால் குடித்தல், செயற்கை குளிர் பானங்கள் போன்றவை நமக்கு நெஞ்செரிச்சலை ஏற்படுத்துகிறது. அதிகமான உணவை உண்ணுவதையும், நெஞ்செரிச்சல் உண்டு பண்ணும் உணவுகளையும் தவிர்த்து நன்றாக தூங்கி மன அழுத்தத்தையும் குறைத்து வந்தால் இந்த நெஞ்செரிச்சல் காணாமல் போய் விடும். நீங்கள் அடிக்கடி அல்லது தினமும் நெஞ்செரிச்சலால் அவதிப்பட்டால் மருத்துவரை நாடுங்கள். அப்பொழுது தான் சரியான நேரத்தில் தகுந்த சிகிச்சையை பெற முடியும்.

Comments