சூழலியல் காக்கும் கழிவறை' என்ற அற்புத கண்டுபிடிப்பு-ஹரிஹரன்
உன் உருவத்துல இன்னொரு அப்துல் கலாமை பார்க்கிறேன்..! உருகிய சைலேந்திர பாபு
தனது 'சூழலியல் காக்கும் கழிவறை' என்ற அற்புத கண்டுபிடிப்புக்காக ஜப்பான் செல்லும் அரசுப்பள்ளி மாணவரை ஒருமணி நேரம் சந்தித்து பாராட்டியிருக்கிறார் ரயில்வே காவல்துறை ஏ.டி.ஜி.பி சைலேந்திரபாபு.
கரூர் மாவட்டம், தான்தோன்றிமலை ஒன்றியத்தில் இருக்கிறது வெள்ளியணை. இந்தக் கிராமத்தில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படிக்கிறார் ஹரிஹரன். இவர் இந்தப் பள்ளியின் அறிவியில் ஆசிரியர் தனபால் வழிகாட்டுதலோடு, கல்வாழையை வைத்து சூழலியல் காக்கும் கழிவறை என்ற அறிவியல் கண்டுபிடிப்பை கண்டறிந்துள்ளார். இதற்கு ஏகப்பட்ட விருதுகளும், பாராட்டுகளும் குவிகின்றன. இந்நிலையில், மத்திய அரசின் மனித வள மேம்பாட்டு அமைச்சகம் மூலம் வரும் மே 12 முதல் 17 வரை ஜப்பான் செல்ல தேர்வாகியுள்ளார். வெள்ளியணை என்கிற சாதாரண குக்கிராமத்தில் இருந்து இப்படி அபரிதமான அறிவியல் கண்டுபிடிப்பு மூலம் ஜப்பான் செல்லும் வாய்ப்பைப் பெற்றிருக்கும் ஹரிஹரனுக்கு ஏகப்பட்ட பாராட்டுகள் குவிகின்றன. இந்நிலையில், ரயில்வே துறை ஏ.டி.ஜி.பி சைலேந்திரபாபுவும் தன் பங்குக்கு ஒரு மணி நேரம் ஹரிஹரனை சந்தித்துப் பாராட்டி இருக்கிறார். சில தினங்களுக்கு முன்பு கரூர் காகிதபுரத்தில் உள்ள தமிழ்நாடு காகித ஆலைக்கு வருகை தந்தார் சைலேந்திரபாபு. அவரோடு பாபு ஐ.பி.எஸ்ஸூம் வருகை தந்தார். அப்போது,தனது வழிகாட்டு ஆசிரியர் தனபாலோடு போய் சைலேந்திரபாபுவை சந்தித்திருக்கிறார். அப்போது, ஹரிஹரன் கண்டுபிடிப்பைக் கேட்டு அசந்த சைலேந்திரபாபு, தான் வந்த வேலையே மறந்தவராக ஹரிஹரனின் கண்டுபிடிப்பை பற்றி ஒரு மணி நேரம் கேட்டு தெரிந்துகொண்டு, ஆச்சர்யபட்டிருக்கிறார்.
நாம் மாணவன் ஹரிஹரனிடம் பேசினோம். 'எனது கண்டுபிடிப்பு இத்தனை பாராட்டுகளை பெற்று தரும்ன்னு நான் கனவிலும் நினைக்கலை. ஜப்பான் போற வாய்ப்பை வேற பெற்று தந்திருக்கு. சைலேந்திரபாபு சார், எங்களை சந்திக்க பத்து நிமிடம்தான் டைம் கொடுத்திருந்தார். ஆனால், நான் சூழலியல் காக்கும் கழிவறை கண்டுபிடிப்பை பத்தி சொல்லச் சொல்ல, அவர் அதை பத்தி கேட்டு, ஒரு மணி நேரத்துக்கு மேல் எங்களை சந்திக்க அனுமதித்தார். கிராமத்தைச் சேர்ந்த, அதுவும் அரசுப் பள்ளியைச் சேர்ந்த மாணவனான நீ இவ்வளவு பெரிய கண்டுபிடிப்பைக் கண்டுபிடித்திருப்பது உண்மையில் பெரிய விஷயம். உன் உருவத்தில் இன்னொரு அப்துல்கலாமை பார்க்கிறேன் தம்பி. உன் சாதனைகள் இன்னும் பெரிதாக இருக்கனும். உன்னைப் பார்த்து இன்னும் பல விஞ்ஞானிகள் அரசுப் பள்ளிகளில் இருந்து, குறிப்பா கிராமங்களில் இருந்து நிறைய உருவாகணும். வாழ்த்துகள்'ன்னு சொன்னார். எனக்கு உச்சி குளிர்ந்து போச்சு. அதோடு, தான் எழுதிய 'சாதிக்க ஆசைப்படு'ங்கிற புத்தகத்தை எனக்கு பரிசா கொடுத்து வாழ்த்தி அனுப்பினார். பாரி சாரும் என்னை ஊக்கப்படுத்தினார். எனக்கு இப்போதே ஜப்பான் போன மாதிரி புது உத்வேகமா இருந்துச்சு" என்றார் நெக்குருகிப்போய்!
Comments
Post a Comment