கேம் பிரியர்களுக்காக ஷியோமி கொண்டு வரும் ஸ்பெஷல் மொபைல்..!
கேம் பிரியர்களுக்காக ஷியோமி கொண்டு வரும் ஸ்பெஷல் மொபைல்..!
தற்பொழுது வெளியாகும் ஸ்மார்ட்போன்களில் கேமராவுக்கும் அடுத்து டிஸ்ப்ளேவுக்கும் அதிகமாக முக்கியத்துவம் தரப்படுவது போலத் தெரியலாம். ஆனால், அதைத் தவிர்த்து வேறு சில வசதிகளை மையமாக வைத்து சில ஸ்மார்ட்போன்கள் வெளியாகிக் கொண்டுதான் இருக்கின்றன. அதில் ஒன்று கேமிங் ஸ்மார்ட்போன்கள். மொபைலில் விளையாடும் ஹெவியான கேம்களுக்கு ரசிகர்கள் இன்றும் இருக்கத்தான் செய்கிறார்கள். கணினி, ப்ளே ஸ்டேஷன் என விளையாடிப் பழகியவர்களுக்கு மொபைலில் இருக்கும் சிறிய கேம்கள் பிடிப்பதில்லை அவர்களுக்குத் தேவைப்படுவது ஹெவியான கேம்கள்தான். அவர்களுக்காகவே உருவாக்கப்படுவதுதான் கேமிங் ஸ்மார்ட்போன்கள். கடந்த சில மாதங்களுக்கு முன்னால் கேமிங்கில் பிரபலமான Razer என்ற நிறுவனம் கேமிங் ஸ்மார்ட்போன் ஒன்றை அறிமுகப்படுத்தியிருந்தது. அதன் பின்னர் ஷியோமி தற்போழுது அறிமுகப்படுத்தியிருக்கிறது.
Xiaomi Black Shark
ஏற்கெனவே கடந்த மாதம் கேமிங் லேப்டாப் ஒன்றை ஷியோமி அறிமுகப்படுத்தியிருந்தது. அதைத் தொடர்ந்து கேமிங் ஸ்மார்ட்போன் ஒன்றை ஷியோமி அறிமுகப்படுத்தலாம் என தகவல்கள் வெளியாகிக்கொண்டிருந்த நிலையில் பிளாக் ஷார்க் என்று பெயரிடப்பட்ட ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தியிருக்கிறது. ஷியோமி வெளியிடும் முதல் கேமிங் ஸ்மார்ட்போன் இது. கேமிங் பிரியர்களுக்கான ஸ்மார்ட்போன் என்பதால் அவர்களின் விருப்பத்திற்கேற்றவாறு இதை வடிவமைத்திருக்கிறது ஷியோமி.
கேமிங்கிற்காக வடிவமைக்கப்பட்டுள்ளதால் ஷியோமியின் மற்ற போன்களிலிருந்து சற்று வித்தியாசமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. டூயல் சிம் வசதி கொண்ட இந்த ஸ்மார்ட்போனில் 5.99 இன்ச், 18:9 ratio டிஸ்ப்ளே இருக்கிறது. Adreno 630 GPU இருப்பதால் கேம்களின் கிராபிக்ஸ் வேகமாக இருக்கும் அதோடு சேர்த்து அதிகச் செயல்திறன் கொண்ட குவால்காம் ஸ்னாப்டிராகன் 845 ப்ராஸசர் இதில் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. மொபைலோடு இணைத்துப் பயன்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கும் கேம் பேட்தான் இந்த ஸ்மார்ட்போனின் ஸ்பெஷல். ப்ளூடூத் மூலமாக மொபைலோடு இந்த கேம் பேடை இணைத்துக்கொள்ள முடியும். இதில் கேம் கன்ட்ரோல்கள் இருக்கின்றன. இதன் மூலமாக மொபைலில் கேம் விளையாடும்போது சாதாரண டிஸ்ப்ளேவை விடவும் எளிதாக கன்ட்ரோல் செய்ய முடியும். இதன் பின்புறமாக 12+20 மெகாபிக்சல் திறன் கொண்ட டூயல் கேமராக்கள் இருக்கின்றன. முன்புறமாக 20 மெகாபிக்சல் கேமரா இருக்கிறது.
`மொபைலில் கொஞ்ச நேரம் விளையாடினாலே பயங்கரமா சூடாகுது' என்பதுதான் மொபைல் கேமிங் ரசிகர்கள் பெரும்பாலானோர் கூறும் குற்றச்சாட்டாக இருக்கும். ஆனால், இந்த மொபைலில் அந்தக் கவலை இருக்கப்போவதில்லை என்கிறது ஷியோமி. மொபைல் செயல்படும்போது உருவாகும் வெப்பத்தைக் குறைப்பதற்காக லிக்விட் கூலிங் அமைப்பை இதனுள்ளே பொருத்தியிருக்கிறது. இது மொபைல் ப்ராஸசிங் யூனிட்டில் உருவாகும் வெப்பத்தை 8°C வரை குறைக்கும். இதனால் ப்ராஸசரின் செயல்திறன் வெப்பத்தால் பாதிக்கப்படாது. பிளாக் ஷார்க் மோடுக்கு மொபைலை மாற்றுவதற்குத் தனியாக ஒரு பட்டன் இருக்கிறது இதனை ஆன் செய்தால் மொபைல் ஹை பெர்பாஃமென்ஸ் மோட்க்கு மாறிவிடும்.
மொபைல் கேமர்களின் மற்றொரு கவலை சார்ஜ் விரைவாகத் தீர்ந்துவிடுவது. அதைச் சரி செய்யும் வகையில் இதில் 4,000 mAh பேட்டரி கொடுக்கப்பட்டிருக்கிறது குவிக் சார்ஜிங் வசதியும் இருப்பதால் வேகமாக மொபைலை சார்ஜ் செய்து கொள்ள முடியும். கேம் விளையாடுபவர்கள் சவுண்ட் எஃபெக்ட்டை விரும்புவார்கள் என்பதால் இதில் டூயல் ஸ்பீக்கர்களை கொடுத்த ஷியோமி 3.5 ஆடியோ ஜாக்கை தூக்கிவிட்டது. கேமிங் ஸ்மார்ட்போன்தானே என்று இல்லாமல் மொபைலில் இருக்கும் மற்ற விஷயத்திலும் கவனம் செலுத்தி வடிவமைத்திருக்கிறது ஷியோமி. வழக்கமாகத் தனது ஸ்மார்ட்போன்களில் பயன்படுத்தும் MIUI- யை இதில் பயன்படுத்தவில்லை. அதற்கு மாறாக JOY UI என்ற புதிய கஸ்டமைஸ்டு இயங்குதளத்தைப் பயன்படுத்தியுள்ளது. 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி இன்டெர்னல் மெமரி, 6 ஜிபி ரேம் மற்றும் , 64 ஜிபி இன்டெர்னல் மெமரி என இரண்டு வேரியன்ட்களில் இதை அறிமுகப்படுத்தியிருக்கிறது ஷியோமி. தற்போழுது சீனாவில் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும் இந்த ஸ்மார்ட்போனின் விலை $557 டாலர்களாக விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனை ஷியோமி இந்தியாவில் அறிமுகப்படுத்துமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்
.
Comments
Post a Comment